top of page

செம்மறி ஆடுகளின் வகைகள்

Updated: May 16, 2024

செம்மறி ஆடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. சில இனங்கள் கம்பளி ரோம உற்பத்திக்காக வளர்க்கப்படுகிறது. தீவனம் மற்றும் கால நிலைக்கு ஏற்றவாறு தமிழக முழுவதும் பல வகையான இனங்கள் வளர்க்கப்படுகிறது. ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு  வகையான உடல்வாகு இருக்கும் மற்றும் கால  நிலைக்கு ஏற்றவாறு வளரும். எனவே ஆடு வளர்க்க விரும்புவர்கள் இடத்திற்கு ஏற்றவாறு இனங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். மற்ற இட செம்மறி ஆடுகளை வளர்க்க விரும்பினால் அந்த இனத்தினுடைய குணநலங்களை நன்கு அறிந்து கொண்டு அதனை பராமரித்து வளர்க்க வேண்டும்.


செம்மறி ஆடுகளின் வகைகள்:

மேச்சேரி

தமிழ்நாட்டின் சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் உள்ளது. இளம்பழுப்பு தோல் நிறத்துடன் நடுத்தர அளவிலான உடலைக் கொண்டிருக்கும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் இனம். இருபாலருக்கும் கொம்புகள் இல்லை. தோல், தரத்தில் மிக உயர்ந்தது. மொத்த உடல் எடையில் இறைச்சி கொடுக்கும் விழுக்காடு மற்ற இனங்களைவிட அதிகம். பெட்டை மற்றும் கிடா ஆடுகளின் சராசரி உடல் எடை 22 - 36 கிலோ. 


சென்னை சிவப்பு(Madras sheep)

தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகின்றன. இது இறைச்சி நோக்கத்திற்கான இனமாகும். பெரும்பாலானவை சிவப்பு, இளம்சிவப்பு முதல் கரும்சிவப்பு நிறத்தில் உள்ளன. இந்த இன கிடா நல்ல சுருட்டையான கொம்புகள் இருக்கும், பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது. சில ஆடுகளின் நெற்றியில் வண்ணக் கோடுகள் இருக்கும். பெட்டை மற்றும் கிடா ஆடுகளின் சராசரி உடல் எடை 24 - 36 கிலோ.


இராமநாதபுரம் வெள்ளை

தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றன. வெள்ளை  நிறத்தில் இருக்கும் மற்றும் ஆடுகளில் தலை மற்றும் கால் பகுதிகளில் கரும்புள்ளிகள் காணப்படும். இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படுகிறது. கிடா ஆடுகளின் கொம்புகள் தடித்து திருகி இருக்கும். பெட்டை ஆடுகளுக்கு கொம்பு இருக்காது. பெட்டை மற்றும் கிடா ஆடுகளின் சராசரி உடல் எடை 23 - 31 கிலோ.


கீழக்கரிசல்

தமிழ்நாட்டின் இராமநாதபுரம், மதுரை, மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுகின்றது, கோடைக்காலங்களில் மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் செல்வதால் இந்த ஆடுகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் காணப்படும். இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படுகிறது. நடுத்தர உடலமைப்பைக் கொண்டது. கருஞ்சிவப்பு நிறம் கொண்டது. தலை, வயிறு மற்றும் கால்களில் கருமைநிறம் காணப்படும். கிடாவுக்கு தடித்த, முறுக்கிய கொம்புகள் உண்டு. பெரும்பாலான ஆடுகளில் கீழ்தாடையில் தாடி காணப்படும். பெட்டை மற்றும் கிடா ஆடுகளின் சராசரி உடல் எடை 22 - 29 கிலோ. 


வேம்பூர்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, நாகலாபுரம் பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் காணப்படுகிறது. இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது. இவை உயரமான ஆடுகளாகும். வெள்ளை நிற உடலில், சிவப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும். தொங்கும் காதுகளைக் கொண்டது. கிடாவுக்குக் கொம்பு உண்டு மற்றும் பெட்டைக்குக் கொம்பு இல்லை. பெட்டை மற்றும் கிடா ஆடுகளின் சராசரி உடல் எடை 28 - 35 கிலோ. 


நீலகிரி

தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் காணப்படுகிறது.மென்மையான ரோம உற்பத்திக்காகப் வளர்க்கப்படுகிறது. நடுத்தர உடலமைப்பைக் கொண்டது. பெரும்பாலும் வெண்மை நிறத்தில்  காணப்பட்டாலும், சில ஆடுகளில் உடல் மற்றும் முகம் பழுப்பு நிறத்தில் காணப்படும். அகன்ற தொங்கும் காதுகளைக் கொண்டது. பெட்டைக்குக் கொம்பு இல்லை. பெட்டை மற்றும் கிடா ஆடுகளின் சராசரி உடல் எடை 31 கிலோ.


திருச்சி கருப்பு

தமிழ்நாட்டின் திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் காணப்படுகிறது. கம்பளி ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது. சிறிய உடலமைப்பைக்  கொண்டது. உடல் முழுவதும் கருமை நிறம் கொண்டது. கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக்  கொம்பு இல்லை. பெட்டை மற்றும் கிடா ஆடுகளின் சராசரி உடல் எடை 19 - 26 கிலோ.


குரும்பை/கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காணப்படுகிறது. கம்பளி ரோம உற்பத்திக்குப் பயன்படுகிறது. நடுத்தர உடலமைப்பைக் கொண்டது. பொதுவாக வெண்மை நிறம் கொண்டது. தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கருப்பு அல்லது பழுப்பு நிறம் காணப்படும். பெட்டை மற்றும் கிடா ஆடுகளின் சராசரி உடல் எடை 20 - 25 கிலோ.



 
 
bottom of page